இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத்திட்டம்)

அறிமுகம்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் என பாராளுமன்ற உறுப்பினர்களால் குறிப்பிடப்படுவது, மிகவும் பிரபல்யமாக வரவு செலவுத்திட்டம் என அழைக்கப்படுகின்றது. இலங்கைப் பாராளுமன்றத்தின் வருடாந்தக் கலண்டரில், வருடாந்த வரவு செலவுத்திட்டம் சமர்ப்பித்தலும் அதனைத் தொடர்ந்து வரும் விவாதமும், ஓர் ஆண்டில் பாராளுமன்றம் விவாதிக்கும் சட்டவாக்கம், பிரேரணைகள், தீர்மானங்கள் எல்லாவற்றையும் விட முதன்மை பெறுகிறது. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் பிற சட்ட மூலங்களைப் போன்று வரவு செலவுத்திட்டமும் முதலாம், இரண்டாம், மூன்றாம் மதிப்பீடுகளைக் கொண்டிருக்கின்றது. அது பாராளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்படும் போது மட்டுமே சட்டமாகின்றது.

வரவு செலவுத்திட்டம் பிற சட்டமூலமொன்றின் நடவடிக்கை முறைகளைப் பின்பற்றினாலும் கூட அது ஒரு சராசரியான நிதிச்சட்டமூலம் அல்ல. அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை, கடந்த ஆண்டுகளில் அதன் செயலாற்றுகை, மேலும் அது மேற்கொள்ள எண்ணியுள்ள புதிய திருப்பங்கள் என்பவற்றைப் பற்றி நாட்டுக்கும், உண்மையில் முழு உலகுக்கும், அறிவிப்பதற்கு நிதியமைச்சர் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவது ஒரு மரபாகும். எனவே அனைத்து வரி செலுத்துவோருக்கும், வர்த்தக முயற்சியாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அரச நலன்புரி உதவிகளில் தங்கியிருக்கும் மக்களுக்கும் அது முக்கியமானதாகும்.

 

பகிரங்க நிதிகள் மீதான பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் தொடர்பான அரசியலமைப்பின் ஏற்பாடுகள்

அனைத்து பொது நிதிகள் மீதான பாராளுமன்றத்தின் அடிப்படை அதிகாரங்களும் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு - அத்தியாயம் XVII இல் வகுக்கப்பட்டுள்ளது.

உறுப்புரை 148
ஏதேனும் வரி, வீதவரி அல்லது வேறு அறவீட்டை விதிப்பதற்குக் கருதும் ஏதேனும் ஒரு பொது அதிகாரசபை அல்லது உள்ளூர் அதிகாரசபை பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்ட அதிகாரத்தின் கீழ் மட்டுமே அவ்வாறு அறவிட முடியுமென இவ்வுறுப்புரை கூறுகின்றது. எல்லா பகிரங்க நிதிகளும் பாராளுமன்றத்தின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்.


உறுப்புரை 149
குறித்த ஒரு நோக்கத்துக்காக ஏலவே ஒதுக்கப்படாத பொது நிதிகள், திரட்டு நிதியத்தில் வரவு வைக்கப்படும். அரசுக்குச் செலுத்தப்படும் வரிகள், விதிப்பனவுகள், வீத வரிகள், தீர்வைகள் மற்றும் ஏனைய எல்லா வரவுகளும் வருமானங்களும் குறித்த ஏதேனும் செயற்பாட்டுக்காக ஏலவே ஒதுக்கப்பட்டிராவிடின், திரட்டு நிதியத்தில் சேர்க்கப்படும். திரட்டு நிதியத்திலிருந்து எந்நோக்கங்களுக்காக நிதிகள் பெறப்படலாம் என்பது பற்றிப் பாராளுமன்றம் தீர்மானிக்கலாம். இது பொதுவாகப் பகிரங்கக் கடன் மீதான வட்டி, கடனாழ் நிதியக் கொடுப்பனவுகள் மற்றும் திரட்டு நிதியம் தொடர்பான செலவுகள் என்பவற்றை உள்ளடக்கும்.


உறுப்புரை 150
குறிப்பிட்ட ஒரு நிதியாண்டில், குறித்ததொரு பொதுச் சேவைக்காக, குறித்ததொரு தொகைப்பணத்தை வழங்குவதற்கான தீர்மானமொன்றை அல்லது சட்டமொன்றை பாராளுமன்றம் நிறைவேற்றியதும், திரட்டு நிதியத்திலிருந்து அரசாங்கம் நிதிகளைப் பெறலாம். பாராளுமன்றம் அதிகாரமளித்தவுடன், நிதியமைச்சரினால் கையொப்பமிடப்பட்ட ஆணையின் பிரகாரம் மட்டுமே குறித்த தொகை மீளப்பெறப்படலாம்.

 

150ம் உறுப்புரையின் (3) மற்றும் (4) ம் பந்திகள் இந்தப் பொதுவான நடைமுறைக்கு இரண்டு விதிவிலக்குகளைத் தருகின்றன.

  1. இது, பாராளுமன்றமானது, வரவு செலவுத்திட்டம் மூலமாக நிதியினை ஒதுக்குவதற்கு முன்பாகக் கலைக்கப்படும் சந்தர்ப்பத்தில் பிரயோகிக்கப்படலாம். அவ்வாறு ஏற்படும் போது, புதிய பாராளுமன்றம் கூடவுள்ள திகதிக்கு முன்னுள்ள 3 மாதங்களுக்கு அரச சேவைகளைப் பராமரிப்பதற்கான செலவுகளுக்கு அனுமதியளிக்க, சனாதிபதிக்கு அதிகாரம் உண்டு
  2. சனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் ஒன்றிற்கு அழைப்பு விடுக்கும் போது, அதற்கான பணம் ஏற்கனவே பாராளுமன்றத்தினால் ஒதுக்கப்படாத சந்தர்ப்பத்திலே, தேர்தல் ஆணையாளருடன் கலந்தாலோசித்ததன் பின், திரட்டிய நிதியில் இருந்து நிதியினை வழங்குவதற்கு சனாதிபதி அதிகாரமளிக்கலாம்
2018-11-07 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom