இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அரசாங்கச் சட்டமூலங்கள் - ஒதுக்கீட்டுச் சட்டமூலங்கள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலங்கள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் நடைமுறைகளும் சாதாரண சட்டமூலங்களை ஒத்தவையே. எனினும், 75 நிலையியற் கட்டளையின் பிரகாரம் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் பரிசீலனைக்காக இருபத்தாறு நாட்கள் ஒதுக்கப்படும். ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடானது வரவு செலவுத் திட்ட உரையுடன் ஆரம்பிப்பதோடு, அதைத்தொடர்ந்து ஆகக் கூடுதலாக ஏழு நாட்கள் விவாதம் இடம்பெறும்.

இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்திற்கு ஒதுக்கப்பட்ட ஏழு நாட்களின் இறுதியில் ஒதுக்கீட்டு சட்டமூலமானது வாக்களிப்பிற்கு எடுத்துக்கொள்ளப்படும். வாக்கெடுப்பானது 47 ஆம் நிலையியற் கட்டளைக்கு இணங்க குரல் மூலமாகவோ, வரிசை வரிசையாகவோ, இலத்திரனியல் வாக்கு பதிகருவியை பயன்படுத்தி பெயர்களை அழைப்பதன் மூலமாகவோ இடம்பெறலாம். பாராளுமன்றம் சட்டமூலத்திற்கு சார்பாக வாக்களித்தவுடன் சட்டமூலமானது முழுப் பாராளுமன்ற குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படும்.

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை

குழுநிலைக்கு ஆகக் கூடுதலாக இருபத்திரண்டு நாட்கள் ஒதுக்கப்படுவதோடு ஒதுக்கீட்டுச் சட்டமூலமானது முழுப் பாராளுமன்றக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படும்போது அனைத்து வாசகங்கள், தலைப்புகள் மற்றும் அட்டவணைகள் என்பன அதற்காக பிரேரிக்கப்பட்ட திருத்தங்களுடன் பரிசீலிக்கப்பட்டு 130 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படுகின்றது. 28 ஆம் இலக்க நிலையியற் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளவை எவ்வாறிருப்பினும் எந்தவொரு நிகழ்ச்சித்திட்டம், கருத்திட்டம் அல்லது செலவு விடயத்தின் தொகைக் குறைப்பிற்கான பிரேரணைக்கும் 130(9) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் முன்னறிவித்தல் தேவைப்படும்.

முழுப் பாராளுமன்றக் குழுவில் ஒவ்வொரு அமைச்சுகளுக்குமான வாக்குகள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் தவிசாளர் குறித்த வாக்குகள் பரிசீலிக்கப்பட்டு திருத்தங்களுடன் அல்லது திருத்தங்களின்றி நிறைவேற்றப்பட்டதென பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவார். சகல வாக்குகளும் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டவுடன் சட்டமூலம் மூன்றாம் முறையாக மதிப்பீடு செய்யப்பட்டு வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் நிறைவேற்றப்படும். இச்சந்தர்ப்பத்தில் சபாநாயகர் குறிப்பிட்ட ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் திருத்தங்களுடன் அல்லது திருத்தங்களின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக அறிவிப்பார்.

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டால் அரசியலமைப்பின் உறுப்புரை 48(2) இன் பிரகாரம் அமைச்சரவை கலைக்கப்பட்டதாகக் கருதப்படும்.

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2018-04-25 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom