இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நிலையியற் கட்டளைகள்

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளானவை இணங்கப்பட்ட விதிகளாகும். இவற்றின் கீழ் நடைமுறைகள், விவாதம் மற்றும் சபையினுள் உறுப்பினர்களது நடத்தை என்பன சீரமைக்கப்பட்டுள்ளன. நிலையியற் கட்டளைகளின் பிரதான நோக்கமானது, பாராளுமன்றத்தின் ஒழுங்கமைதியுடைய, காத்திரபூர்வமான செயற்பாட்டுக்குத் தேவையான நடவடிக்கைகளை வகுத்துரைப்பதாகும். நிலையியற் கட்டளைகள் பாராளுமன்ற நடவடிக்கைகளின் மிக முக்கியமான மூல ஆதார ஏடாகவும் மற்றும் விவாதங்களுக்கு அதிக சந்தர்ப்பம் அளிப்பனவாகவும், பரிசீலனையின் பின்பு தீர்மானங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பினை வழங்குவனவாகவும் உள்ளன. இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் கீழ் நிலையியற் கட்டளைகளுக்கு விதிகளுக்கான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற நூல் நிலையத்தில் காணப்படுகின்ற பதிவுகளின்படி நிலையியற் கட்டளைகளின் முதலாவது தொகுதி அப்போதைய சட்டவாக்கச் சபையினால் 1912ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போதைய பிரித்தானிய பாராளுமன்றத்தை இவை அடிப்படையாகக் கொண்டமைந்தன. அதன் பின்னர் பாராளுமன்ற வரலாற்றிலே பல்வேறு கட்டங்களிலே அத்தகைய புதிய நிலையியற் கட்டளைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

பாராளுமன்றத் தீர்மானத்தின் மூலம் நிலையியற் கட்டளைகளுக்கு ஏற்பாடு செய்யலாமென இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 74ஆம் உறுப்புரை குறிப்பிடுகின்றது. முன்னர் நடைமுறையில் இருந்த நிலையியற் கட்டளைகளுக்குப் பொருத்தமான மாற்றங்களை மேற்கொண்டு, தற்போது நடைமுறையிலுள்ள நிலையியற் கட்டளைகள், 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் கட்டமைக்கப்பட்டு, 1979ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டன. சபையினால் காலத்திற்குக் காலம் நிலையியற் கட்டளைகளுக்குத் திருத்தங்கள் கொண்டுவர முடியும். 116ஆம் நிலையியற் கட்டளையின் கீழ், நிலையியற் கட்டளைகள் குழுவொன்று நியமிக்கப்படல் வேண்டும்.

 

இக்குழுவானது சபாநாயகர் பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர் மற்றும் தெரிவுக் குழுவால் நியமிக்கப்படும் வேறு ஆறு உறுப்பினர்களை உள்ளடக்கியதாகக் காணப்படும். பாராளுமன்றத்தின் அலுவல் தொடர்பான நடைமுறை, ஒழுங்கு ஆகிய விடயங்களைப் பரிசீலிப்பதும், நிலையியற் கட்டளைகளில் திருத்தங்கள் அவசியமெனக் கருதுகின்ற விடயங்கள் தொடர்பான விதப்புரைகளை மேற்கொள்வதும் நிலையியற் கட்டளைகள் குழுவின் பணியாகும். எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் திருத்தங்களை மேற்கொள்வதற்கான பிரேரணைகளை அவை தொடர்பான முன்னறிவித்தலுடன் குழுவிற்கு ஆற்றுப்படுத்தலாம். குழுவானது அவற்றைப் பரிசீலனை செய்து தனது அறிக்கையில் உள்ளடக்கலாம். இவ்வறிக்கையானது முறையாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்காகச் சபையில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

 

பொதுத் தேர்தல் ஒன்றின் பின்னர் நடைபெறும் முதலாவது கூட்டத்தின்பொழுது மேற்கொள்ளப்படவேண்டிய நடைமுறைகள், உறுப்பினர் இருக்கை ஒழுங்கு, சபாநாயகர், பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோரைத் தெரிவு செய்தல், புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாணம் அல்லது உறுதிப்பிரமாணம், கூட்டங்களுக்கான திகதி, நேரம் ஆகியவற்றை நிர்ணயித்தல் போன்றவற்றை ஒழுங்குபடுத்துவதாகத் தற்போதைய நிலையியற் கட்டளைகள் தொகுதி காணப்படுகிறது. கூட்ட நடப்பெண், பாராளுமன்ற அலுவல்கள் போன்றனவும் கூட நிலையியற் கட்டளைகள் மூலமாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன. அவசரச் சட்டமூலங்களுக்கான நடைமுறைகள், தனியார் உறுப்பினரின் சட்டமூலம், ஒதுக்கீட்டுச் சட்டமூலம், வாக்களித்தல் போன்றனவும் நிலையியற் கட்டளைகளில் விதித்துரைக்கப்பட்டுள்ளன. விவாதத்திற்கான ஒழுங்கு விதிகள், பாராளுமன்றத்தில் உரையாற்றும் உறுப்பினர்களுக்கான விதிகள், உரையாற்றா உறுப்பினர்களுக்கான விதிகள் மற்றும் பாராளுமன்றத்தில் ஒழுங்கு போன்ற விடயங்களை நிலையியற் கட்டளைகள் தெளிவாக நெறிப்படுத்துகின்றன.

 

சனாதிபதி, நீதிபதிகள் மற்றும் ஏனைய உயரதிகாரிகள் ஆகியோருக்கெதிரான குற்றப் பிரேரணையின்பொழுது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக நிலையியற் கட்டளைகளில் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. அவ்வாறே, பாராளுமன்றச் செயலாளர் நாயகம், கணக்காய்வாளர் தலைமை அதிபதி, தேர்தல்கள் ஆணையாளர், நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் ஆகியோரை அவர்களின் பதவியிலிருந்து அகற்றுவது தொடர்பான ஏற்பாடுகளும் அவற்றில் உள்ளன.

 

முழுப் பாராளுமன்றக் குழு, தெரிகுழுக்கள், ஆலோசனைக் குழுக்கள் மற்றும் சிறப்பு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட சபைக் குழு, தெரிவுக் குழுக்கள், நிலையியற் கட்டளைகள் குழு, பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு, அரசாங்கக் கணக்குக் குழு, அரசாங்கப் பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு, பொது மனுக் குழு, சிறப்புரிமைகள் மற்றும் உயர் பதவிகள் பற்றிய குழு போன்றவற்றின் அலுவல்களை நடத்துவதற்கான வழிகாட்டல்களை நிலையியற் கட்டளைகள் கொண்டுள்ளன.

 

தேவையானபொழுது பிரேரணையொன்றின் மூலம் நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்திவைக்கும் அதிகாரம் சபைக்கு உண்டு. சபையில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக நிலையியற் கட்டளைகளில் எதுவும் குறிப்பிடப்படாதவிடத்து, அவ்விதமான விடயங்களைச் சீராக்குவதற்குரிய எஞ்சிய அதிகாரம் சபாநாயகருக்கு அளிக்கப்பட்டுள்ளது

 

 

பதிப்பிறக்கிக் கொள்ளுங்கள்

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள்
 
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2018-06-26 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom